×

ஆசிய விளையாட்டுப்போட்டி: வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றது இந்திய ஆடவர் அணி!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. அபிஷேக் வர்மா, ஒஜாஸ், பிரத்மேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வில்வித்தை காம்பவுன்ட் பிரிவில் தங்கம் வென்றுள்ளனர். இறுதிப் போட்டியில் தென்கொரியாவை 235-230 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

19வது ஆசிய விளையாட்டுப்போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா என 45 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. மொத்தம் 40 வகையான விளையாட்டுகளில், 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளில் சுமார் 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆசிய விளையாட்டுப்போட்டி கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி சீன தைபே அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 234-224 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்கொரிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தென்கொரியாவை 235-230 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்று அமர்களப்படுத்தியுள்ளது. நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என 83 பதக்கங்களுடன் தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறது.

The post ஆசிய விளையாட்டுப்போட்டி: வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றது இந்திய ஆடவர் அணி! appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Hangzhou ,Abhishek Varma ,Ojas ,Bratmash ,Archery ,
× RELATED பாஜவுக்கு தாவினார் தடகள வீராங்கனை